அக்னிமூலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் அக்னிமூலை வலுவாக இருந்தால் எதிரிகள் இல்லாமல் இருப்பர்.
அக்னிமூலையை ஒட்டி, விதார், ஆகாசம், ப்ருசன், பூஷன், ஸாவித்ரன், வித்ரன், சவிதா, கிருகஷதன் மண்டபங்கள் (திசை) வளர்ந்தால் பெண்கள் தவறானவழியில் செல்வர்; இளம்பெண்கள் குடும்ப கௌரவத்தை மறந்து காதலித்துத் திருமணம் செய்வர் என்று சொல்லப்பட்டுள்ளது.
வீட்டில் தவறான மூலைகள் வளர்ந்திருந்தால் அதனால் தவறான எண்ணங்கள் ஏற்படும். வீட்டினை மாற்றியமைத்தால் ஆறு மாதத்தில் நல்ல பலன் பெறமுடியும். அவர்களது தவறான எண்ணங்கள் மாறி உயர்வான எண்ணங்கள் அவர்களுக்கு வருவது நிச்சயம். புகழ்பெறுவதும், பெயர் கெடுவதும் வீட்டின் அமைப்பினால்தான். இவை மட்டுமல்ல; மிகப்பெரிய நிறுவனங்கள் நல்ல பெயரில் இருக்கும்; திடீரென்று கெட்ட பெயர் ஏற்பட்டு அந்த நிறுவனத்தையே மூடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அதற்குக் காரணம் வாஸ்துதான். வாஸ்துப்படி அமைக்கப்பெற்ற நிறுவனங்கள் வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கும். அமையாத நிறுவனங்கள் தம் புகழை இழக்கும்.
நிறுவனங்களின் வசதிக்காக அவர்களாக சில மாற்றங்களைச் செய்வர். அதனால் அந்த நிறுவனத்தின் புகழ் கெடும். இதுபோன்ற நிறுவனங்கள் ஒருசில மாற்றங்கள் செய்தால் மீண்டும் நல்ல பெயரைப் பெறமுடியும்.
அடுத்து, வீட்டின் பாகம் பிரித்தல் குறித்துப் பார்ப்போம். பொதுவாக அண்ணன்- தம்பிகளுக்காக பாகம் பிரிக்கும்போது ஈசான்ய மூலையில் உள்ள கிணறு அமைப்பு, பொதுக் குளியல் இடம், பொதுத்தோட்டம் என ஈசான்யம் சார்ந்த பகுதிகளை அண்ணன்- தம்பிகளுக்குப் பொதுவாக அனுபவித்துக் கொள்ளவும், வீட்டை மட்டும் இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதும் அக்காலத்தில் மரபாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் மனையை இருபங்காக்கி அல்லது சமபங்காக்கி, மேற்கண்ட பொது இடம் குறித்து ஏதும் வைக்காமல் விட்டுவிட்டதால், வாரிசில் ஒருவர் நல்ல வளர்ச்சி அடைகிறார். அடுத்த வாரிசு வீழ்ச்சியடைகிறார்.
அண்ணன்- தம்பி நான்கு பேர் இருக்கின்றனர் என்றால், இருக்கும் இடத்தை நான்கு சமபங்காகப் பிரித்து, நான்கு வீடுகள் ஒட்டிக்கட்டி அதை நால்வருக்கும் பிரித்துக்கொடுக்கின்றனர். அந்த வீட்டில் வசிப்போரில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே வளர்ச்சியடைகிறார்கள். மற்றவர் பொருளாதார அளவில் வீழ்ச்சியடைகிறார். மேலும் எதையோ இழந்துவிட்டது போன்ற மனநிலையும் இருக்கும். அதற்குக் காரணம் முதலிலில் சொன்னதுபோல பொதுவான இட அமைப்பு விடாததே. வடக்குப் பார்த்த வீடுகளில் மூன்று வீடுகள் இருந்தால், மேற்குபாக வீட்டை வீட்டின் தலைப்பிள்ளைக்கும், நடு வீட்டை இரண்டாவது மகனுக்கும், ஈசான்யபாக வீட்டை கடைசிப் பிள்ளைக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும். இவை தொடர்ந்துவரும் மரபாகும். ஆனால் இவர்களுக்கு ஈசான்ய பாகமெனும் குருதிசையில் பொது இடம் அமைத்துக் கொடுக்கவேண்டும்.
கிழக்குப் பார்த்த வீடு எனில் தெற்கில் உள்ள வீடு முதல் பிள்ளைக்கும், நடுவில் உள்ள வீடு அடுத்த பிள்ளைக்கும், வடக்கில் உள்ள வீடு கடைசிப் பிள்ளைக்கும் பிரித்தளிக்கவேண்டும். தெற்குப் பார்த்த வீடு எனில் மேற்கில் உள்ள வீடு பெரியவருக்கும், நடுவில் உள்ள வீடு அதற்கடுத்த மகனுக்கும், கிழக்கில் உள்ள வீடு கடைசி மகனுக்கும் பிரித்தளிக்கவேண்டும். அதேபோன்று மேற்குப் பார்த்த வீடு எனில் தெற்கில் உள்ள வீடு பெரியவருக்கும், நடுவில் உள்ள வீடு அடுத்த மகனுக்கும், வடக்கில் உள்ளது கடைசி மகனுக்கும் பிரித்தளிக்க வேண்டும். குருதிசையில் பொது இடம் இருப்பது அவசியம்.
வீட்டை தாமாகப் பிரித்து ஒருவர் வளர்ச்சியடைவதையும், ஒருவர் வீழ்ச்சியடைவதையும் தடுக்கவேண்டுமானால், வாஸ்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். வாஸ்துப்படி மனைகளைப் பிரித்து வளமோடு வாழலாம்.
(தொடரும்)
செல்: 94434 80585